×

வேடசந்தூரில் மயில்கள் சரணாலயம் அமைக்க வேண்டும்: விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

வேடசந்தூர்: வேடசந்தூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மயில்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால், மயில்கள் சரணாலயம் அமைக்க நடவடிக்கை வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் வடமதுரை, வாடிப்பட்டி, எரியோடு, அய்யலூர், வேடசந்தூர், குஜிலியம்பாறை மற்றும் பழநி பகுதிகளில் அதிக எண்ணிக்கையில மயில்கள் நடமாடுகின்றன. வேடசந்தூர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இரை தேடி வரும் மயில்கள், தோட்டங்களிலேயே தங்கி விடுவது வழக்கமாக உள்ளது.

மயில்கள் அதிகமாக உள்ளதால் வேடசந்தூர் பகுதியில் மயில்கள் சரணாலயம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்கள் மற்றும் விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது. வடமதுரை பகுதியில் தேவாங்கு சரணாலயம் உள்ளது போன்று வேடசந்தூர் பகுதியில் மயில்கள் சரணாலயம் அமைத்து, சுற்றுலாத் தலமாக மாற்ற வேண்டும் என அவர்கள் கோரியுள்ளனர். இந்தியாவில் கர்நாடகத்தில் பங்கப்பூர், ஆதிசிந்தனகிரி ஆகிய இடங்களிலும் மகாராஷ்டிராவில் நெய்க்கானியிலும் மயில்கள் சரணாலயங்கள் அமைந்துள்ளன.

தற்போது தமிழ்நாட்டில் திண்டுக்கல், விருதுநகர், ராமநாதபுரம், திருநெல்வேலி மாவட்டங்களில் மயில்கள் சரணாலயம் அமைக்க வனத்துறை திட்டமிட்டுள்ளது. ஆனால் சரணாலயம் அமைக்க வனத்துறை திட்டமிட்டுள்ள காடுகளின் நடுவே தனியார் நிலங்கள் உள்ளதால் சரணாலயம் அமைப்பதில் சிக்கல் நீடிக்கிறது. திண்டுக்கல் மாவட்டத்தை கடந்து செல்லும் சரக்கு ரயில்களில் இருந்து சிந்தும் கோதுமை உள்ளிட்ட தானியங்களை தேடி மயில்கள் வருகின்றன. வேடசந்தூரில் தானியங்களை உண்ண வரும் மயில்கள் ரயில்களில் அடிப்பட்டு இறக்கின்றன.

மற்ற பறவைகளை போல மயில்களால் வேகமாக பறக்க முடியாது. இதனால் தண்டவாளங்களில் உள்ள கோதுமை உள்ளிட்ட தானியங்களை உண்ண வரும் மயில்கள், ரயில் இன்ஜின்களில் அடிபட்டு இறப்பதும், காயமடைவதும் தொடர்ந்து நடக்கின்றன.வேடசந்தூரில் மயில்கள் சரணாலயம் அமைப்பதன் மூலம் தேசியப்பறவையான மயில் இனம் அழிந்து விடாமல் பாதுகாக்கப்படும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து அவர்கள் கூறுகையில். ‘‘எங்கள் தோட்டங்களுக்கு இரை தேடி வரும் மயில்கள், நாங்கள் கோழிகளுக்கு வைக்கும் தீவனங்களை உண்டு, கோழிகளோடு சகஜமாக உலாவுகின்றன. தற்போது நாங்கள் மயில்களுக்கும் சேர்த்து இரை வைக்கிறோம்.

இருந்தாலும் மயில்களுக்கு கோதுமை மிகவும் பிடித்த உணவு என்பதால் தண்டவாளங்களுக்கு சென்று, சரக்கு ரயில்களில் இருந்து சிந்தும் கோதுமையை கொத்தி தின்கின்றன. இதனால் ரயில் இன்ஜினில் மயில்கள் அடிபட்டு இறப்பது, இப்பகுதியில் தொடர்ச்சியாக நடைபெறுகிறது. இங்கு மயில்கள் சரணாலயம் அமைத்தால், மயில்கள் அழிந்து வருவதை தடுக்க முடியும்’’ என்றனர்.

The post வேடசந்தூரில் மயில்கள் சரணாலயம் அமைக்க வேண்டும்: விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Vedasandur ,Peacocks ,Dinakaran ,
× RELATED அய்யலூரில் சாலையில் கிடக்கும்...